"யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்பது முதுமொழி. நிஜத்தில் இது சாத்தியமா? இதற்கு வாழும் எடுத்துக்காட்டாக வலம் வருகிறார் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த விர்ஜினியே விளாமின்க்.
இவர் குறித்து அறிந்த நாம் தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டோம். உடனேயே முட்டுகாட்டில் ஒரு பகுதிக்கு தான் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். இவரை நேரில் காண களத்திற்கு சென்றது புதியதலைமுறை. அங்கு அழகிய பக்கிங்ஹம் கால்வாயில் மீன்களும் பறவைகளும் விளையாட கரையோரம் தேங்கி கிடந்த குப்பைகளுக்கு அருகில் நின்று கொண்டு பொதுமக்கள் மேலும் சில ஊழியர்களிடம் "PLEASE DONT DROP HERE.இது உங்கள் இடம். இந்தக் குப்பைகளை இங்கேயே குழித் தோண்டி புதைத்தால் மண் வளம் பாதிப்படையும். உரிய இடத்தில் இதை கொண்டு போய் சேருங்கள்” என்று அறிவுறுத்திக் கொண்டிருந்தார். ஆங்கிலத்தில் இவர் பேசும் அனைத்தையும் ‘நம்ம பீச் - நம்ம சென்னை’ என்ற இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையைச் சேர்ந்த சேகர் என்பவர் மொழிபெயர்த்து கூறி கொண்டிருந்தார்.
அப்போது வந்த தொலைப்பேசி அழைப்பில் "Why SO MUCH DELAY பின்பு COME QUICK" என்றார் விர்ஜினியே. அரை மணி நேரத்தில் ஒரு ஜெ.சி.பி. இயந்திரம் வந்து சுத்தம் செய்யும் பணியை தொடங்கியது, உடன் ஊழியர்களும் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
வழக்கமாக அசுதத்தை கண்டதும் மூக்கை மூடிக் கொண்டு கண்டும் காணாமல் செல்லும் நமக்கு, இது வியப்பாக இருந்தது. இது குறித்து அவருடன் கைகோர்த்து செயல்பட்டு வரும் சேகரிடம் பேசினோம் "இந்த அம்மாவ எனக்கு 7 வருஷமா தெரியும். இந்தப் பகுதி மக்களுக்கு இந்த மாதிரி நிறைய விஷயங்கள் பண்றாங்க. இயற்கையுடன் ஒன்றி உறவாடுபவர்கள் நாம், தமிழர்கள் அதனை மறந்து விட்டோமோ என பயமா இருக்கு சார்" என்றார்.
அதன் பின் ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்து கைகுலுக்கிக் கொண்டிருந்த விர்ஜினேயேவிடம் அவரது முயற்சிக்கு பாராட்டுகளைத் தெரிவித்தோம். அதற்கு அவர் "சிரித்தபடி வெல்கம், வாங்க ஈஞ்சம்பாக்கம் கடற்கரை போகலாம். அங்கு சுத்தம் செய்ய ஆட்கள் வந்திருப்பார்கள்" என்று புறப்பட்டார். அங்கு சென்ற நமக்கு மேலும் ஆச்சிரியம் காத்திருந்தது. அந்தப் பகுதியில் ஏழு ஆண்டுகளாக வசிக்கும் விர்ஜினியே ஈஞ்சம்பாக்கம் முதல் பனையூர் வரையுள்ள கடற்கரையை தினசரி இரண்டு மணி நேரம் தூய்மைப்படுத்துகிறார். இவரது சொந்த பணத்தில் சம்பளம் வழங்கி பணிக்கு ஆட்களை நியமித்துள்ளார். மேலும் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து போட கடற்கரை நெடுகிலும் குப்பைத்தொட்டி, விழிப்புணர்வு வரைப்படங்கள் வைத்துள்ளார். இவர்கள் முயற்சியால் சிறு குப்பைகள் கூட அங்கு இல்லை. இதனால் அதிகளவில் ஆமைகள் அங்கு முட்டையிட்டு குஞ்சி பொறிக்க கரைக்கு வருகின்றன.
நாம் அனைவரும் கைகோர்த்தால் மட்டுமே கடல்வாழ் உயிரினங்களை அழிவிலிருந்து காக்க முடியும் என்கின்ற விர்ஜினியே விளாமின்க் "மீன்கள் குறைந்து வருகின்றன, இதற்கு முக்கிய காரணம் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலந்து சிறிய துகளாக மாறி மிதக்கின்றன. அதனைமீன்கள் மற்றும் ஆமைகள் உணவு எனக் கருதி உண்பதால் இறக்கின்றன. அந்த மீன்களை நாம் உண்கிறோம்" இந்த ஆபத்தை நாம் என்று உணர என்று போகிறோமோ” என்றார்.
சரி, வெறும் சுற்றுப்புற தூய்மையோடு இவரது பணி முடிந்துவிட்டதா என்றால் இல்லை. புகைப்படக் கலைஞரான விர்ஜினியே கண்காட்சி மூலம் விற்பனை செய்யும் தனது புகைப்படங்களில் மூலம் வந்த பணத்தை பனையூர் ஆரம்பப் பள்ளியின் சீரமைப்புக்காக வழங்கி இருக்கிறார். மேலும் எந்த ஒரு விஷயத்தையும் நாளைய தலைமுறையாம் மட்டுமே மாற்ற முடியும் என நம்பும் இவர், சுற்று பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களிடம் தூய்மைக் குறித்து விழிப்புணர்வையும் அதன் அவசியத்தையும் எடுத்துரைத்து வருகிறார்.