ஆண்டிபட்டி அருகே முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் மாமன் மைத்துனர் உறவு வலுப்பெற துடைப்பத்தால் அடிக்கும் வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான முத்தாலம்மன் திருவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு பக்தர்கள் விரதமிருந்து காப்புகட்டி தீச்சட்டி, பால் குடம் மற்றும் காவடி எடுத்து நேத்திக்கடன்களை செலுத்தினர்.
.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாமன் மைத்துனர்கள் ஒருவருக்கொருவர் துடைப்பத்தால் அடித்துக்கொள்வது தொன்றுதொட்டு நடந்து வருகிறது. இதனால் மாமன் மைத்துனர்கள் உறவுகளிடையே ஒற்றுமை வலுப்பெறும் என்ற ஐதீகம் நெடுங்காலமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் தற்போது நடக்கும் மூன்றுநாள் விழாவில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக மாமன் மைத்துனர் துடைப்பத்தால் அத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. மாமன் மைத்துனர்களிடையே ஏற்பட்டுள்ள முன் விரோதங்களை தவிர்க்கவும் மனக் கசப்பு நீங்கி குடும்பத்தில் அனைவருக்கும் ஒற்றுமை ஏற்படவும் அனைவரும் ஒன்று கூடி முத்தாலம்மனை வழிபட்டு சேத்தாண்டி வேடமிட்டும் பெண் வேடமிட்டும் நடனமாடி மகிழ்கின்றனர்.
மேலும் ஒருவரை ஒருவர் சேற்றில் நனைத்த துடைப்பத்தால் மாறி, மாறி அடித்துக் கொண்டனர். இவ்விழாவில் பெண்கள் மற்றும் வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களை தொந்தரவு செய்வதில்லை.
இந்த வினோத விழாவை காண தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து திரளானோர் வந்திருந்தனர். இந்த முத்தாலம்மன் திருவிழாவின் போது ஒவ்வோர் ஆண்டும் மழை பெய்யும் என்பதும் ஐதீகம்