விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை ஐந்து நாட்களாக தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன. சென்னை எழும்பூர் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த 26 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்றன.
இப்போட்டிகளின் முடிவில், பெண்கள் ஹாக்கி போட்டியில் மைசூர் பல்கலைக்கழகம் முதலிடம் பெற்று ரூ.1 லட்சம் பரிசுத்தொகையை கைப்பற்றியது. கோவை பாரதியார் பல்கலைக்கழகம் இரண்டாமிடம் பெற்று 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையை பெற்றது. மூன்றாமிடம் பெற்ற கோழிக்கோடு பல்கலைக்கழகம் 25 ஆயிரம் ரூபாயும், நான்காமிடம் பெற்ற சென்னை பல்கலைக்கழகம் 10 ஆயிரம் ரூபாயும் பரிசாக வென்றன.
இதையடுத்து பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், “வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துகள். இந்த மைதானத்திற்கு ஏற்கெனவே வந்தபோது விளையாட்டு வீரர்களுக்கு என பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அந்த கோரிக்கைகள் துறை ரீதியாக நிறைவேற்றப்படும். விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் பூர்த்தி செய்யப்படும்” என்றார். இந்த விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ரகுபதி ஆகியோர் பங்கேற்றனர்.