மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடரும் கன மழையால் கோவை குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவையில் மாநகரப் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளதை அடுத்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை சிறுவாணி மலைப் பகுதியிலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றாலற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்வதால் குற்றாலம் செல்லும் பாதைகளில் பல மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி போளுவாம்பட்டி வனச்சரக அலுவலரின் பரிந்துரையின்பேரில், கோவை குற்றாலம் சூழல் சுற்றுலாவானது தற்காலிகமாக பொதுமக்களுக்கு அனுமதி மறுத்து மாவட்டத்துறை சார்பாக உத்திரவிடப்பட்டுள்ளது. மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது . மேலும் மாநகரப் பகுதிகளில் கடுமையாக காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு உள்ளனர்.