திருச்சி வங்கி லாக்கர்களில் கொள்ளை நடந்துள்ள நிலையில், வங்கி லாக்கரில் உள்ள பொருட்கள், பணத்துக்கு வங்கியின் பொறுப்பு என்ன என்பதைப் பார்க்கலாம்.
வங்கி லாக்கர்களில் உள்ள பொருட்கள், பணம் மற்றும் ஆவணத்துக்கும் வங்கிக்கும் உள்ள தொடர்பு குறித்து ரிசர்வ் வங்கி விதிமுறைகள் உள்ளன. அதன்படி, லாக்கரில் திருட்டு, கொள்ளை ஆகியவற்றின் மூலம் இழப்பு ஏற்பட்டால் வங்கி இழப்பீடு அளிக்காது. லாக்கருக்கான ஒப்பந்தத்தில் இதற்கான விதிகள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். வங்கி லாக்கரைப் பொருத்தவரை வாடிக்கையாளருக்கும் வங்கிக்கும் இடையேயான தொடர்பு, வாடகைக்கு இடம் என்ற அடிப்படையில் மட்டுமே உள்ளது.
வீட்டு உரிமையாளர் போல வங்கியும், வாடகைதாரர் போல வாடிக்கையாளரும் லாக்கர் விஷயத்தில் கருதப்படுவர். வாடகைக்கு குடியிருக்கும் வீட்டில் திருட்டு போனால் வீட்டு உரிமையாளர் எப்படிப் பொறுப்பாக மாட்டாரோ, அதே நிலைதான் லாக்கர் வாடிக்கையாளருக்கும், வங்கிக்கும் இருக்கிறது. லாக்கரில் வைக்கும் பொருளுக்கான பொறுப்பை வாடிக்கையாளரே ஏற்க வேண்டும், தேவைப்பட்டால் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என வாடகை ஒப்பந்தத்தில் வங்கிகள் குறிப்பிடுகின்றன.
லாக்கரில் இடம்பெறும் பொருட்கள் குறித்து வங்கிக்கு எதுவும் தெரியாத நிலையில், திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதங்களின்போது அவற்றுக்கு வங்கி பொறுப்பேற்காது என்பதும் ஒப்பந்தத்தில் தெளிவுபடுத்தப்படுகிறது. எனினும், வங்கி லாக்கர் அறைகளின் பாதுகாப்பு ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படியே அமைக்கப்படுவதாகவும், அதையும் மீறி நடைபெறும் அசம்பாவிதங்களுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும் வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.