ராமநாதபுரம் கடலாடி அருகே வங்கி ஏடிஎம் பணம் ரூபாய் 1.60 கோடியை ஊழியர்களே கொள்ளையடித்திருப்பது அம்பலமாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் ஏடிஎம்-களில் பணம் நிரப்புவதற்காக, ஓட்டுநர், ஆயுதம் ஏந்திய காவலர், வங்கி பணியாளர்கள் 2 பேர் என மொத்தம் 4 பேர் வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது, மலட்டாறு முக்குரோட்டில் பணம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதாக கூறப்பட்டது. இதையடுத்து வாகனத்தில் இருந்த 1 கோடியே 60 லட்சம் ரூபாய் பணம் மாயமானதாக பணியாளர்கள் சாயல்குடி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர்.
இதையடுத்து ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தலைமையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. பணம் கொள்ளை போனது, திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்ற சந்தேகத்துடன் விபத்துக்குள்ளான வாகனத்தில் வந்த குருபாண்டி, அன்பு, வீரபாண்டி, கபிலன் ஆகிய 4 பேரிடமும் போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, வங்கி ஊழியர்கள் 4 பேரும் கூட்டாக இணைந்து வங்கி பணம் 1.60 கோடியை கொள்ளையடித்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து இதுவரை 36 லட்சம் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் கொள்ளையில் சம்பந்தப்பட்ட சிலரை தேடி வருகின்றனர்.