சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக, விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது.
சசிகலாவுக்கு ஆறு நாட்களுக்குப் பிறகு ரத்த அழுத்தம் அதிகரித்திருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் சிகிச்சைக்கு அவர் ஒத்துழைப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்திருந்தது. அதோடு, சசிகலாவுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 272 ஆக இருப்பதால் இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தது.
தற்போது அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், சசிகலாவின் உடலில் சர்க்கரை அளவு உள்ளிட்டவை இயல்பான அளவிலேயே உள்ளதாகவும், ரத்தம் அழுத்தம் அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளது. மேலும், சசிகலா 4-வது நாளாக ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி இயற்கையாக சுவாசித்து வருகிறார் எனவும், அறிகுறிகள் இல்லாத கொரோனாவுக்கு சசிகலா சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் கூறியுள்ளது.
முன்னதாக, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலா, நேற்று முன்தினம் முறைப்படி சிறை நிர்வாகத்தால் விடுதலை செய்யப்பட்டார். உடல் நிலை சரியாகும் பட்சத்தில் பிப்ரவரி முதல் வாரத்தில் அவர் தமிழகம் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.