ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலை கோவிலில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பக்தர்கள் செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படும்.
இந்நிலையில், கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்கு நான்கு நாட்கள் (21.11.22 முதல் 24.11.22 வரை) அனுமதிக்கப்படக் கூடிய நிலையில், சதுரகிரி மலைப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக நீரோடைகளில் (வழுக்குப் பாறை, சங்கிலி பாறை, மாமரத்து ஓடை) நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் பக்தர்கள் செல்ல நான்கு நாட்கள் தடை விதித்து வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.