சமீபத்தில் கோவையில் தனியார் வங்கியில் பணியாற்றிவந்த ரவி என்ற இளைஞர் கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் ரம்மி விளையாடத் துவங்கி இருக்கிறார். ஆரம்பத்தில் அதிக பணம் ஜெயித்தவர் பின்பு தொடர்ச்சியாக பணத்தை இழந்து தோல்வியையே சந்தித்தார்.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டார். இவரைப்போலவே, அடுத்தடுத்து ஆன்லைன் ரம்மியால் இருவர் தற்கொலை செய்துகொண்டனர். இதனையடுத்து, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி விளையாடுவோருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், 6 மாத சிறைத்தண்டனையும் அளிக்கப்படும். ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனப் பொறுப்பாளர்கள் ரம்மி விளையாட்டரங்கம் வைத்திருந்தால் 10 ஆயிரம் அபராதத் தொகையும் 2 ஆண்டு சிறைத்தண்டனை என்றும் கூறப்பட்டுள்ளது. ரம்மியால் இளைஞர்கள் பணத்தையும் வாழ்க்கையையும் இழக்கும் அவலநிலையை போக்கவே இந்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.