புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், சென்னையில் பத்தாயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு காவல்துறை பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. சென்னையில் உள்ள கடற்கரை சாலைகள் அனைத்தும் இன்று இரவு 10 மணிக்கு மேல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, நட்சத்திர விடுதிகளில் உள்ள பார்களை இரவு 10 மணிக்குள் மூடவும் உத்தரவிட்டுள்ளது.
மெரினா உள்ளிட்ட கடற்கரை சாலைகளில் முற்றிலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள காவல்துறை, தடையை மீறி அங்கு செல்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளது. மேலும், பைக் ரேஸ் மற்றும் சாலை விபத்துகளை தடுக்கும் விதமாக சென்னையில் உள்ள மேம்பாலங்களை மூடவும் காவல்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, சென்னையில் மட்டும் 300 சோதனைச் சாவடிகள் அமைத்து காவல்துறையினர் கண்காணிக்க உள்ளனர்.