ஊருக்குள் உலா வந்த 'பாகுபலி' காட்டுயானை: 'கெத்தாக' எதிர்த்து நின்ற குட்டி நாய்

ஊருக்குள் உலா வந்த 'பாகுபலி' காட்டுயானை: 'கெத்தாக' எதிர்த்து நின்ற குட்டி நாய்
ஊருக்குள் உலா வந்த 'பாகுபலி' காட்டுயானை: 'கெத்தாக' எதிர்த்து நின்ற குட்டி நாய்
Published on

குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் பாகுபலி காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் ஓராண்டுக்குப் பின்னர் மீண்டும் பாகுபலி யானையின் நடமாட்டம் கடந்த வாரம் துவங்கிய நிலையில், தற்போது சமயபுரம், கல்லார், குரும்பனூர், ஓடந்துறை என மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக சுற்றித்திரிந்து வருவது இப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் முகாமிட்டு குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதும் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதுமாக இருந்த பாகுபலி என்றழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானையை கும்கி யானைகளின் உதவியோடு பிடித்து அதன் கழுத்தில் ரேடியோ காலர் கருவியை பொருத்திய பின்னர் அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் திட்டமிட்டனர்.

இதற்காக கடந்தாண்டு ஜூன் மாதம் மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு சிறப்பு வனத்துறை குழுக்கள் மூலம் மயக்க ஊசி செலுத்தி பாகுபலியை பிடிக்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பாகுபலி யானை இவர்களின் பிடியில் சிக்காமல் தந்திரமாக தப்பியபடி இருந்ததால் ஒருமாத காலம் முயன்றும் முடியாமல் ஆபரேஷன் பாகுபலி தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், ஓராண்டு தலைமறைவு வாழ்வை முடித்து கொண்ட பாகுபலி கடந்த வாரம் மீண்டும் மேட்டுப்பாளையம் பகுதியில் ஊடுருவி மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் வழக்கம் போல் நடமாட துவங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் பாகுபலி யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கத் துவங்கினர்.

இதையடுத்து மேட்டுப்பாளையம் நகரை ஒட்டியுள்ள சமயபுரம் பகுதியில் சாலையை கடந்த ஊருக்குள் நுழைந்து காண்போரை கதிகலங்க வைக்கும் பிரமாண்ட பாகுபலி யானையை அங்கிருந்த சிறு நாயொன்று குலைத்தபடி விரட்டிச் சென்று தனது எதிர்ப்பை காட்டியதோடு யானையின் வருகையை ஊர் மக்களுக்கு தெரிவிக்குபடி குலைத்துச் சென்றது.

இதனால் கோபமடைந்த யானை நாயை நோக்கி பிளிறியபடி அதனை விரட்ட முயன்றது. ஆனாலும் பயப்படாத நாய் கடைசி வரை யானையை துரத்துவதிலேயே குறியாக இருந்தது. இது அங்கு யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வந்த வனத்துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதையடுத்து நேற்றிரவு சமயபுரம் வழியாக பவானியாற்று பகுதிக்குச் சென்ற பாகுபலி இன்று அதிகாலை அதே வழியில் மீண்டும் திரும்பி வந்தது. பாகுபலியின் தொடர் நடமாட்டதால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com