தமிழக அமைச்சரவையில் 3ஆவது முறையாக பதவி மாற்றத்தை சந்தித்திருக்கிறார் ராஜ கண்ணப்பன்.. தொடக்கத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த அவர், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். குறிப்பாக, சாதி பெயரை கூறி திட்டியதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் புகார் கூறிய அதே நாளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டார் ராஜ கண்ணப்பன். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தபோது சில மாதங்கள் உயர்கல்வித்துறை அமைச்சராகவும் கூடுதல் பொறுப்பு வகித்தார் ராஜ கண்ணப்பன்.. இந்த சூழலில், தற்போது பால்வளத்துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவரான கே.ராமசந்திரனின் அமைச்சர் பதவி இந்த முறை பறிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி ஆட்சிக்காலத்திலேயே அமைச்சராக இருந்த இவருக்கு 2021ஆம் ஆண்டு, முதலில் வனத்துறை பொறுப்பு கொடுக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு டிசம்பரில் இவரிடமிருந்த வனத்துறை பறிக்கப்பட்டு சுற்றுலாத்துறை வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இருப்பினும் கட்சியின் மூத்த நிர்வாகி என்பதால், புதிதாக அமைச்சராகும் கோவி. செழியன் வகித்துவந்த அரசு தலைமைக் கொறடா பதவி, கே.ராமசந்திரனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
அமைச்சரவையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரதிநிதியாக பார்க்கப்பட்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் தட்டுப்பாடு, விநியோகம் தாமதம், பாலின் தரத்தில் மாற்றம் என புகார்களும் சர்ச்சைகளும் நீண்ட நிலையில் பதவியை இழந்திருக்கிறார் அவர்.
அமைச்சரவையில் மீண்டும் சேரும் ஆவடி சா.மு. நாசர் ஏற்கனவே பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர். தொண்டர் ஒருவரை நோக்கி கல் வீசிய வீடியோ வைரலாக பரவிய சூழலில் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட அவருக்கு தற்போது இடம் கிடைத்திருக்கிறது.
இதேபோல், அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றதால், முதலில் இலாகாவையும் பின்னர் அமைச்சர் பதவியையும் இழந்த செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு கிடைத்துள்ளது. அவர் ஏற்கனவே பார்த்து வந்த துறையான மின்சாரத்துறையே மீண்டும் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
உயர்கல்வித்துறை அமைச்சரும் பல்கலைக்கழகங்களின் இணைவேந்தருமான பொன்முடி, வனத்துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் ரவியுடன் மோதல்போக்கு நீடித்துவந்த சூழலில் பொன்முடியின் அமைச்சர் பொறுப்பு மாற்றப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சராகக் கூடும் என எதிர்பார்க்கப்படும் கோவி. செழியனும் பொன்முடியைப் போன்றே முனைவர் பட்டம் பெற்றவர். இவர், ஆளுநர் மாளிகையுடன் மென்மையான போக்கை கடைபிடிப்பாரா அல்லது பொன்முடியின் வழியை பின்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.