கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகப்பிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் பொம்மி. இவருக்கும் தியாகராஜன் என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. தம்பதியினர் ஆவடி அருகே வசித்து வந்தனர். இதனிடையே பொம்மி கர்ப்பம் அடைந்தார். சீமந்த விழாவிற்காக தாய் வீட்டிற்கு சென்ற பொம்மிக்கு இன்று அதிகாலை 5 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொம்மி இன்று அனுமதிக்கப்பட்டார். சுமார் 6.30 மணியளில் பொம்மிக்கு அதிகப்படியான பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அப்போது, மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் இல்லை. இதனையடுத்து செவிலியர் முத்துக்குமாரி என்பவர் பொம்மிக்கு பிரசவம் பார்த்துள்ளார். குழந்தை முழுமையாக வெளியே வரும் முன்பே, அலட்சிய உணர்வோடு செவிலியர் முத்துக்குமாரி குழந்தையின் தலையை மட்டும் பிடித்து வெளியே இழுத்துள்ளார். இதில் குழந்தையின் தலை துண்டானது. அதேசமயம் குழந்தையில் உடல் மற்றும் கால் பாகங்கள், தாயின் வயிற்றில் சிக்கிக்கொண்டது.
இதனையடுத்து விபரீதத்தை உணர்ந்த மருத்துவமனை நிர்வாகம், பொம்மியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் உடல் மற்றும் தலை பாகங்கள் தாயில் வயிற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாகவே அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போதிய நேரம் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்நிலையில் மருத்துவர் இல்லாமல் செவிலியர் பிரசவம் பார்த்தால் குழந்தையின் தலை துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.