அயனாவரம் KH சாலையில் நேற்று முன்தினம் (நவம்பர் 19 ம் தேதி) மதியம் இளம்பெண் ஒருவரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. அயனாவரம் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் தாக்குதலுக்குள்ளான பெண் அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் என்பது தெரியவந்தது. போலீசார் தொடர் விசாரணையில் அந்த இளம் பெண்ணும் வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்ற இளைஞரும் கடந்த ஜூலை மாதம் வீட்டுக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அச்சமயத்தில் அப்பெண்ணின் தாய் சுமதி அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்திருந்திருக்கிறார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு 17 வயது சிறுமியை திருமணம் செய்ததற்காக சிறுவர் திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்ட பிரிவில் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்ததுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி அப்பெண்ணின் பாட்டி, உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்திருக்கிறார். அதற்காக அப்பெண்ணின் உறவினர், அந்த இளம்பெண்ணை இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு அயனாவரம் KH சாலை வழியாக சென்றுள்ளார்.
செல்லும் வழியில் மணிகண்டன் சாலையில் வரவே, ஆத்திரத்தில் கத்தியால் அவரை தாக்க முற்பட்டுள்ளார் சந்தோஷ். அப்போது, அந்த இளம்பெண் சந்தோஷை தடுக்க முற்படவே, ஆத்திரத்தில் சந்தோஷ் ‘நீ ஏன் இடையில் வருகிறாய்?’ என அந்த இளம்பெண்ணையும் கத்தியை காட்டி மிரட்டி வெட்ட முற்பட்டுள்ளார். இதில்தான் அந்த இளம்பெண்ணுக்கு காது மற்றும் கைகளில் லேசான வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதென போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து அயனாவரம் போலீசார் சந்தோஷ் (எ) தவக்களையை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தோஷ் மீது கீழ்ப்பாக்கம், புளியந்தோப்பு, ஓட்டேரி, வியாசர்பாடி, பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை, அடிதடி உள்ளிட்ட 13 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் அயனாவரம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.