விழுப்புரம் அருகே ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் போலீஸ் உடையில் பொதுமக்களை முகக்கவசம் அணிய எச்சரித்து விழிப்புணர்வூட்டி வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது ராம்கிருபா, ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். இந்த மாணவரின் லட்சியம் ஐபிஎஸ் அதிகாரி ஆவது தான். இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு இவரது ஆசைப்படி பெற்றோர்கள் போலீஸ் சீருடையை வாங்கி கொடுத்தனர்.
அதை அணிந்தபடி கடை வீதியில் உலா வந்த ராம்கிருபா திடீரென கையில் ஒரு கம்பை எடுத்துக்கொண்டு சாலையில் முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள் நிறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் வீதிகளில் முகக்கவசம் அணியாமல் விளையாடும் இளைஞர்களிடமும் சென்று முகக்கவசம் அணிய வலியுறுத்துகிறார்.
நோய் தொற்று பரவ அதிகமாகி இருக்கும் இந்த சூழ்நிலையில் எட்டு வயது ராம் கிருபாவின் செயல் அனைவரையும் வியப்படைய வைத்தது.