தனது வீட்டின் முன் தினசரி வாக்களிப்பதற்கு பணம் வாங்குவது குற்றம் என்ற வாசகத்தை கோலமிட்டு பள்ளி மாணவி ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் வேட்பாளர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த சங்கரபாண்டியன் என்ற சுயேட்சை வேட்பாளரின் 8வயது பள்ளி மாணவியான உஷா தனது வீட்டின் முன்பாக ஓட்டிற்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் எனவும், நமது வாக்கு விற்பனைக்கு அல்ல; என்ற விழிப்புணர்வு வாசகத்தை கோலமாக வரைந்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.
இதேபோன்று தேர்தல் முடியும் நாளான 19ஆம் தேதி வரை வீட்டின் முன்பாக கோலம் வரையவுள்ளார் மாணவி உஷா. மாணவ பருவத்திலயே ஜனநாயக கடமையான வாக்களிப்பது குறித்த மாணவியின் விழிப்புணர்வு முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.