ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்
Published on

ஸ்டெர்லைட் ஆலையின் தீங்குகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரிய மனுவை பரிசீலித்து முடிவெடுக்க தூத்துக்குடி எஸ்.பிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில்," தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையினால், அப்பகுதியில் காற்று, நிலத்தடி நீர் ஆகியவை கடுமையாக மாசடைந்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூடக்கோரியும் கடந்த பிப்ரவரி முதலே பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள ராஜாஜி பூங்காவில் மார்ச் 9 ஆம் தேதி பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தோம். இதற்காக கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி அனுமதிக் கோரி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்திருந்தோம். ஆனால் சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி எங்கள் மனுவை மார்ச் 4ல் நிராகரித்து விட்டார். இதனால் திட்டமிட்டபடி கூட்டத்தை நடத்த இயலவில்லை. ஆகவே, வரும் மார்ச் 17 மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை அதே இடத்தில் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆகவே மார்ச் 17 மாலை ராஜாஜி பூங்காவில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது. 

இந்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், மனுதாரர் அனுமதி கோரியுள்ள இடம் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதி, அதோடு ஏதேனும் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாவர் எனவே அங்கு அனுமதி வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனுதாரர் வேறொரு இடத்தில் மார்ச் 24ல் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து அனுமதி கோரி புதிதாக மனுத்தாக்கல் செய்யவும், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அதனை பரிசீலித்து முடிவெடுக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com