ஊரடங்கு முடியும் வரை மொய்விருந்தை தவிர்க்க வேண்டும் - புதுக்கோட்டை எஸ்பி. அறிவுறுத்தல்
ஊரடங்கு முடியும்வரை மொய்விருந்து விழாக்களை தவிர்க்க வேண்டும் என புதுக்கோட்டை எஸ்பி அறிவுறுத்தியுள்ளார்.
நாளை முழு ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் அலுவலகம் ஆகியவற்றில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசரகால கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 550 காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் ஊர்க்காவல் படையினர் 100 பேரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி உட்கோட்ட பகுதியில் உரிய அனுமதியின்றி மொய் விருந்து விழாக்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. அதன் காரணமாக நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் இனிவரும் காலங்களில் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை சுபநிகழ்ச்சிகளை தவிர மொய் விருந்து போன்ற கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பார்த்திபன் அறிவுறுத்தியுள்ளார்.