“விமர்சனங்கள் என்ற பெயரில் திட்டமிட்ட பொய்யுரைகள், ஆதாரமற்ற அவதூறுகள்..” - விசிக தலைவர் திருமாவளவன்!

“ஆக்கபூர்வமான விமர்சனங்கள எதிர்கொள்வோம்! ஆதாரமில்லாத அவதூறுகளைப் புறம்தள்ளுவோம்!” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருமா
திருமா முகநூல்
Published on

திட்டமிட்ட பொய்யுரைகளாகவும் ஆதாரமற்ற அவதூறுகளாகவுமே அள்ளி இறைக்கப்படுகின்றன என்று விசிக தலைவர் திருமாவளவன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்தான பதிவில், “உதிரிகளா நமது எதிரிகள்?

என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே, வணக்கம் !

களமிறங்கிச் செயல்படுவோர் யாவராயினும் அவர்கள் விமர்சனங்களுக்கு ஆளாவது தவிர்க்க இயலாதது. அதன்படியே கருத்தியல் தளங்களிலும் செயற்பாட்டுக் களங்களிலும் தொடர்ந்து மக்களோடு நின்று பாடாற்றிவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.

விமர்சனங்கள் எவ்வாறாயினும் அவற்றை உள்வாங்கிக் கொள்ளும் பொறுமையையும் பின்னர் அவற்றினடிப்படையில் சுய விமர்சனம் செய்துகொள்கிற துணிவையும் பெறுவதுதான் வெற்றிகரமான அடுத்தகட்ட நகர்வுகளுக்கும் முற்போக்கான வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமையும்.

அப்படியே நாம், நம் மீதான விமர்சனங்களையும் உள்வாங்கிக் கொண்டு, அவை நேர்மையான, ஆக்கபூர்வமான விமர்சனங்களாக இருந்தால், அவற்றிலிருந்து நம்மை நாமே சுய விமர்சனங்களுக்கு உட்படுத்திக் கொள்வதை நடைமுறையாகக் கொண்டிருக்கிறோம். அவற்றுக்கேற்ப தேவையான மாற்றங்களையும் ஏற்றுக் கொள்கிறோம்.

திருமா
திருந்தி வாழ வாய்ப்பு கேட்டு காவல் ஆணையரிடம் மனு அளித்த சம்போ செந்தில் கூட்டாளிகள் இருவர்!

ஆனால், நம்மைப் பற்றிய விமர்சனங்கள் எத்தகையவையாக உள்ளன? அவை, பெரும்பாலும் திட்டமிட்ட பொய்யுரைகளாகவும் ஆதாரமற்ற அவதூறுகளாகவுமே அள்ளி இறைக்கப்படுகின்றன.

கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாகவே நமது களப்பணிகள் மற்றும் வளர்ச்சி நிலைகளுக்கேற்ப, நமக்கு எதிரானவர்கள் விமர்சனங்கள் என்னும் பெயரால் மிகவும் அப்பட்டமான அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். அவை, மிகவும் கேடான உள்நோக்கம் கொண்டவை.

சமூகம், பண்பாடு, மற்றும் அரசியல் தளங்களில், நாம் கைக் கொண்டுள்ள கருத்தியல் மற்றும் நிலைப்பாடுகள், நமது களம் மற்றும் செயற்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராக வெவ்வேறு வகையிலான பகைவர்கள் அவ்வப்போது உருவாகி வருகின்றனர். அவர்கள் நம்மை வீழ்த்துவதற்குக் கையாண்டுவரும் உத்திகள் ஏராளம். அவற்றுள் முதன்மையான ஒன்றுதான் அவதூறு பரப்புதலாகும்.

விமர்சனம் என்பது வேறு! அவதூறு என்பது வேறு!

விமர்சனம் என்பது ஒருவரின் அல்லது ஒரு இயக்கத்தின் கொள்கை கோட்பாடுகள் மற்றும் களப்பணிகள் ஆகியவற்றில் காணும் நிறை - குறைகளை மதிப்பீடு செய்வதாகும். குறைபாடுகளை மட்டுமே சுட்டிக்காட்டாமல் நிறைகளையும் வரவேற்றுப் பாராட்டுவதும்தான் விமர்சனமாகும். ஆனால், அவ்வாறின்றி வாய்க்கு வந்தபடி வன்மத்தைக் கக்குவது விமர்சனமல்ல; அவதூறாகும்!

நம்மை விமர்சிப்பவர்களில் இருவகை உண்டு. நம் மீது நம்பிக்கையும், நமது வளர்ச்சியில் அக்கறையும் கொண்டவர்கள் ஒருவகை. நம்மை ஏற்க மனமில்லாத, நம் வளர்ச்சியை முற்றிலும் விரும்பாத, நம்மை வீழ்த்தி மகிழ்ந்தாட காத்திருக்கும் சதிகாரர்கள் இன்னொரு வகை.

முதல் வகையினர், கொள்கை- கோட்பாடுகள் சார்ந்து குறைகளைச் சுட்டிக்காட்டினாலும், அதில் ஆக்கப்பூர்வமான அறிவுறுத்தல்கள் இருக்கும். அவர்களின் விமர்சனங்களில் கடுமையான காய்தல் இருந்தாலும் காயப்படுத்துதல் இருக்காது. அவற்றை உள்வாங்கிக் கொள்வதற்கும் சுயவிமர்சனம் செய்து நம்மை நாமே சீர்செய்து கொள்வதற்கும் அவை இடமளிக்கும்.

ஆனால், இரண்டாம் வகையினர், கொள்கை சார்ந்து விமர்சிப்பதைவிட, வெறுப்பை உமிழ்வதிலேயே குறியாய் இருப்பர். அருவருப்பான சுடுசொற்களை அள்ளி வீசுவர். உணர்ச்சிகளைத் தூண்டி, உள்ளத்தைக் கீறி நம்மை நிலைகுலைய வைப்பதையே நோக்கமாகக் கொண்டிருப்பர்.

நாகரிகம் என்பது அவர்கள் அறியாத ஒன்று. அண்டப் புளுகுகளே அவர்களுக்கான தொழில் முதலீடு. நீதி, நேர்மை போன்ற அறம்சார் பண்புகளுக்கும் அவர்களுக்கும் தொடர்பிருக்காது. அவதூறு பரப்புதலே அவர்களின் சாதனைகள். அவர்கள் அமைப்புசாரா உதிரிகள். ஏதேனும் அமைப்பைச் சார்ந்திருந்தாலும் அவ்வமைப்புக்கு எவ்வகையிலும் கட்டுப்படாத தான்தோன்றிகள்.

அவர்கள் தனிநபராயினும் அல்லது ஓர் அமைப்பைச் சார்ந்தவராயினும் அவர்களிடம் கருத்தியல் தெளிவில்லையேல்; களமாடும் திறமில்லையேல்; அவர்களால் எவரோடும் எதனோடும் இணைந்தோ இணங்கியோ இயங்கிட இயலாது.

இவர்கள் தமக்குத்தாமே தனிமைப்பட்டு தற்பெருமைப் பேசி தம்பட்டமடிப்பதில் தனிசுகம் காண்பர். 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என ஏறுக்கு மாறாய் செயல்பட்டு இறுமாப்புக் கொள்வர். இடக்கு முடக்காய் இட்டுக்கட்டிப் பேசுவர். எடுப்பார் கைப்பிள்ளைகளாய் ஏவல்களைச் செய்வர். தாழ்ந்தவர்களை இகழ்ந்து ஏகப்பட்டு நடப்பர். வலிமையானவர்களின் பார்வைக்கேற்ப வாலாட்டி மகிழ்வர். நிலை இழந்தவர்கள்.நெறிகெட்ட வீணர்.

திருமா
பாம்பனில் நிகழ்ந்தது என்ன? மேகவெடிப்பு என்றால் என்ன? சுயாதீன வானிலை ஆய்வாளர்கள் விளக்கம்!

மக்களோடு தொடர்பில்லாத இவர்களா நம்மை மதிப்பீடு செய்வது? எவர் நம்மை விமர்சிப்பவர்கள் என்பதையறிந்தே நம் எதிர்வினைகள் அமையவேண்டும்.

கொண்ட கொள்கைக்கென தம் வாழ்வைத் தொலைத்தவர்கள், வலியைச் சுமப்பவர்கள், மக்களை நேசிக்கும் மாந்தநேயம் உள்ளவர்கள் செய்யும் விமர்சனங்களை நாம் புறம்தள்ள இயலாது. அவர்கள் கொள்கை அடிப்படையில் நம் எதிரிகள் என்னும் நிலையில், அவர்களின் விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றும் பொறுப்பு நமக்கு உண்டு.

திருமா
திருந்தி வாழ வாய்ப்பு கேட்டு காவல் ஆணையரிடம் மனு அளித்த சம்போ செந்தில் கூட்டாளிகள் இருவர்!

அது தவிர்க்கமுடியாதது. ஆனால், எதிலும் உறுதியில்லா உதிரிகளா நமது எதிரிகள்? ஆதாரம் ஏதுமின்றி இவர்கள் பரப்பும் அவதூறுகளா நம்மை அசைக்கும் ஆயுதங்கள் ?

காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரைக் கண்டும் காணாமல் கடந்து செல்வோம்! காலமெல்லாம் மக்களுக்காகக் கடமையாற்றுவதில் கவனம் குவிப்போம்! ஆக்கபூர்வமான விமர்சனங்கள எதிர்கொள்வோம்! ஆதாரமில்லாத அவதூறுகளைப் புறம்தள்ளுவோம்!.” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com