ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏரிகளை இணைக்கும் வரத்து கால்வாய் உள்ளது. இது ஏரிகள் நிரம்பினாலும், மழைநீர் சென்றடைய ஏதுவாக கட்டப்பட்டுள்ளது. மாநகராட்சியில் உள்ள சேக்காடு ஏரி, விளிஞ்சியம்பாக்கம் ஏரி, பருத்திப்பட்டு ஏரி போன்ற ஏரிகளை இணைக்கக் கூடிய இந்த கால்வாய், பல்வேறு பகுதிகளை கடந்து பருத்திப்பட்டு ஏரியை சென்றடையும்.
இந்த கால்வாய், முழுவதும் நெகிழி கழிவுகள் நிரப்பி குப்பைத்தொட்டி போல் காட்சியளித்துவந்தது. இது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய தலைமுறையில் செய்தி வெளியானது. இதையடுத்து மாநகராட்சி பொறியியல் பிரிவு சார்பில் சீர் செய்யும் பணிகள் துவங்கப்பட்டது. ஆனால், அதை சரிசெய்த ஊழியர்கள் முழங்கால் அளவு சகதியில் இறங்கி சுத்தம் செய்தது அச்சுறுத்தும் வகையில் அமைந்தது.
ஊழியர்களுக்கு கையுறை போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டதென நிர்வாகம் தரப்பில் சொல்லப்படுகிறது. இருப்பினும் துர்நாற்றம் வீசும் - கழிவுநீர் கால்வாய் போல் காட்சியளிக்கும் அந்த வரத்து கால்வாயை, மணலி பகுதியில் வசிக்கும் நபர்களை கூலிக்கு அழைத்து வந்து சுத்தம் செய்யவைத்துள்ளனர் சிலரென சொல்லப்படுகிறது. ஒரு பக்கம் இடுப்பளவு சகதி, மறுபுறம் கழிவுநீர் வழிந்தோடும் நிலையில் இருக்கும் அந்த கால்வாயில், கழிவுகளை மண்வெட்டியில் அள்ளி அன்னக்கூடை மூலமாக அப்புறப்படுத்தும் செயலும் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதில், கொடூரத்தின் உச்சமாக பணி முடிந்து செல்லும் பணியாளர்கள், தங்களது கை, கால்கள், மற்றும் உடைகளை அங்கு வழிந்தோடும் கழிவு நீரில் கழுவும் அவலம் அரங்கேறியுள்ளது. எவ்வளவோ விஞ்ஞான வளர்ச்சி அடைந்து, நவீன உபகரணங்கள் இருக்கும் நிலையில், மனிதர்கள் கழிவுகளை அகற்ற மிக மோசமாக நடந்துகொண்ட சம்பவம் சர்ச்சையையும் பேரதிர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய அதிகாரிகள், ஒப்பந்ததாரர் என அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து ஆவடி மாநகராட்சி ஆணையரை தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த விவகாரம் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும், ஊழியர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியமர்த்த ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்துவதாகவும் மேலும் இச்சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.