செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை ஆவடியில் சீருடை அணிந்திருந்த காவலர் ஒருவர், இளைஞர் ஒருவரை மூங்கில் உருட்டுக் கட்டையால் தலை, கால் பகுதிகளில் காட்டு மிராண்டித்தனமாக அடித்துள்ளார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், காவலர் அடிப்பதை அங்கிருந்த பெண் ஒருவர் தடுக்க முயற்சிப்பதும், காவலரை அடிக்க அந்த இளைஞர் சாலையில் இருந்த கற்களை எடுக்க முயற்சிப்பதும் இருக்கிறது.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் வைரலான காட்சிகள் குறித்து ஆவடி காவல் ஆணையரகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “ஆவடி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு சாலையில் செல்லும் மக்களை அங்கு போதையில் இருந்த லோகேஷ் என்ற இளைஞர் கற்களைக் கொண்டு அடித்துள்ளார். அதனை விசாரிக்க சென்ற தலைமை காவலர் சரவணன் என்பவரையும் கற்களைக் கொண்டு அடிக்க முயற்சித்துள்ளார். இதனால் காவலர் தரப்பில் குறைந்தபட்ச பலம் பிரயோகிக்கப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் காவலர்கள். பின் பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டார் அந்த இளைஞர் என்று ஆணையரக விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.