கூவம் ஆற்றங்கரையோர வீடுகளை அதிகாரிகள் இடிக்க முயன்றதால், அப்பகுதி மக்கள் கூவம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
சென்னை சத்யாவாணி நகர், கூவம் ஆற்றங்ரையோரத்தில் ஏராளமான மக்கள் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு பெரும்பாக்கத்தில் 2092 வீடுகள் ஒதுக்கப்பட்டன. முதற்கட்டமாக 1700 குடும்பங்கள் அங்கு மாற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள 345 குடும்பங்கள் கொரோனா தொற்று உள்ளிட்ட காரணங்களுக்காக மாற்றப்படாமல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் அப்பகுதிக்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்குள்ள வீடுகளை ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களை கொண்டு இடிக்க முயன்றனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், 'இதை விட்டால் எங்கு வேறு வாழ்விடம் இல்லை' எனக் கூறி, கூவம் ஆற்றில் இறங்கி தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் துணை ஆணையர் உட்பட பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். அங்கு அசாதரண சூழ்நிலை நிலவுவதால் காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.