கொளத்தூர் ஜி.கே.எம் காலனி அருகே ஒளவை நகரில் வீடுகள் இடிக்கப்பட்ட விவகரத்தில், மாற்று இடம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கொளத்தூர் ஒளவை நகர் அருகே மேம்பாலம் கட்டும் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ஒளவை நகரில் இருக்கும் சில வீடுகளை முன் அறிவிப்பு இல்லாமல் இடித்ததாக அந்தப் பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். தங்களுக்கு அரசு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து, அம்மக்களுக்கு வீடுகள் ஒதுக்க அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியை நேற்று தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்தப் பணியில் சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அதிகாரிகள் மூலமாக முதல் கட்டமாக ஆய்வுகளை நடத்தி முடித்திருக்கிறார்கள்.
அந்தவகையில், பயனாளிகள் விவரங்களை சேர்த்து பயோமெட்ரிக் கணக்கெடுப்பு பணியை அதிகாரிகள் முடித்திருகின்றனர். இதனால் விரைவில் அப்பகுதியிலுள்ள 57 பயணாளிகளுக்கு மாற்று வீடுகள் ஒதுக்கீடு ஆணை இருக்கும் என அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.
இப்பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இருப்பதால், அனைவரையுமே அரசு கணக்கில் கொண்டு செயல்பட வேண்டுமென்றும், இந்த 57 குடும்பத்தினர் மட்டுமன்றி அனைவருக்குமே அரசு மாற்று இடம் ஒதுக்க வேண்டுமென்ற கோரிக்கையும் மக்கள்தரப்பில் எழுப்பப்படுகிறது.