ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை: 7 பேர் கைது..!

ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை: 7 பேர் கைது..!
ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை: 7 பேர் கைது..!
Published on

விருதுநகர் மாவட்டம் கோட்டைப்பட்டி கிராமத்தில் ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ஏலம் விடுவது தொடர்பாக ஊர்க் கூட்டம் நடைபெற்றுள்ளது. கூட்டத்தில்  ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அதிமுக கிளை செயலாளர் ராமசுப்புவை போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளனர். இதற்கு அதே கிராமத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் சதிஷ்குமார் (வயது 27) எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அப்போது இரு தரப்பு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் கிராமத்தை சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் அதிமுக பிரமுகர் ராமசுப்புவை போட்டியின்றி தேர்வு செய்தால், ஊருக்கும், கோயிலுக்கும் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்று வாதம் செய்துள்ளனர். இதனை ஏற்காமல் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் சதிஷ்குமார் கடுமையாகத் தாக்கப்பட்டு பலத்த காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சதிஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் அதிமுக பிரமுகர் ராமசுப்பு அவரது சகோதரர் கணேசன், சுப்புராம், சுப்புராஜ், ராம்குமார், செல்வராஜ் (அரசு ஊழியர்), முத்துராஜ் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கிராமத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம் விடப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தில், ஊர் கூட்டத்தில் மோதல் நடந்து ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com