ஆத்தூர் அருகே மின்னல் தாக்கியதில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த இரு பெண்கள் உயிழந்தனர்.
ஆத்தூர், கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்த நிலையில், விவசாயிகள் விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லி தாலுகா ஆணையம்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் என்பவரது மனைவி ஜெயக்கொடி, இவர்களது விவசாய நிலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த அலமேலு ஆகியோர் விவசாய பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில், ஜெயக்கொடி, அலமேலு ஆகிய இருவரும் நிலத்திற்கு உரமிட்டு கொண்டிருந்தபோது திடீரென கனமழை பெய்தது. மழையில் நனையாமல் இருக்க விவசாய நிலத்தின் அருகில் இருக்கும் புளிய மரத்தடியில் இருவரும் மழைக்காக ஒதுங்கி நின்றனர். அப்போது இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் புளிய மரத்தின் மீது மின்னல் தாக்கியதில் ஜெயக்கொடி அலமேலு ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த கெங்கவல்லி போலீசார் இருவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.