குளச்சல் அருகே ரகசிய திருமணம் செய்ய முயன்ற காதல் ஜோடியின் திருமணத்தை மீறிய உறவு அம்பலமானதால் அவமானத்தில் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி. காதலி பலியான நிலையில் காதலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கூட்டமாவு கிராமத்தைச் சேர்ந்தவர் விபின் ராஜ்குமார் (39). மார்பிள் கடையில் வேலை செய்யும் இவருக்கும், புஷ்பலதா என்பவருக்கும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி தக்கலையில் உள்ள மார்பிள் கடைக்குச் சென்ற விபின் ராஜ்குமார் மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் அவரது மனைவி புஷ்பலதா தனது கணவரை காணவில்லை என்று குளச்சல் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்த நிலையில் விபின் ராஜ்குமார் மாயமான அதே நாளில் பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது தம்பி சுஜின் என்பவரின் மனைவி ஜெசி என்பவரும் மாயமானது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் இருவரின் செல்போன் எண்களின் சிக்னல்களையும் ஆய்வு மேற்கொண்டனர். ;அதில் அவர்கள் இருவரின் செல்போன் சிக்னலும் சத்தியமங்கலம் பகுதியை காட்டியுள்ளது. இதனால் சந்தேகம் வலுக்கவே தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் இருவரும் பல வருடங்களாக திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளது தெரியவந்தது.
இவர்கள் அடிக்கடி இதேபோல் வீட்டை விட்டு வெளியேறி சென்று உல்லாசமாக இருந்து வந்ததும் ஒரு கட்டத்தில் தம்பியின் மனைவியை நிரந்தரமாக திருமணம் செய்து தன்னுடனே வைத்து கொள்ளும் நோக்கத்தில் கடந்த 25ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் தஞ்சமடைந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை குளச்சல் அழைத்து வர முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் போலீசார் விசாரணைக்கு பயந்து அந்த ஜோடி சத்தியமங்கலத்தில் இருந்து தலைமறைவாகி ஒவ்வொரு சுற்றுலா தலங்களாக சென்று அறை எடுத்து தங்கி இருந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து போலீசாரின் விசாரணை வேகமெடுக்க அவமானத்தில் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்ட அந்தஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து நேற்று முன்தினம் சொந்த ஊரான கூட்டமாவு பகுதிக்கு வந்துள்ளனர். பின்பு அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் அமர்ந்து தென்னை மரங்களில் வண்டுகளை கொல்ல பயன்படுத்தும் விஷ மாத்திரையை அருந்தியுள்ளனர். சற்று நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி காதலி ஜெசி உயிருக்கு போராடிய நிலையில் அதை தாங்கி கொள்ள முடியாத விபின் ராஜ்குமார் 108-ஆம்புலன்ஸை வரவழைத்து தன்னுடன் காதலியை குளச்சல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் இருவரையும் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜெசி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபின் ராஜ்குமார் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் ஜெசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த குளச்சல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த ஜெசிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் திருமணத்தை மீற் அம்பலமானதால் அவமானத்தில் ஜெசி தற்கொலை செய்து கொணட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.