செய்தியாளர் - ஆறுமுகம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருந்து வருபவர் அண்ணாமலை. இவர் லாரி மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் சட்டவிரோதமாகவும் அனுமதியின்றியும் அந்த கிராமத்தில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான பெரிய ஏரியில் இரவு பகல் பாராமல் மணல் அள்ளி விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததால் அந்த ஏரியில் அதிக அளவு பள்ளம் ஏற்பட்டு அதில் குளிப்பதற்காக செல்லும் மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்து வருவது வாடிக்கையாகி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவரை இரண்டு மாணவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதனால் அந்த ஏரியில் மேற்கொண்டு மணல் அள்ளக்கூடாது என அந்த கிராம மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இருப்பினும் அண்ணாமலை மீண்டும் மணல் எடுத்து லாரிகள் மூலம் விற்பனை செய்து வந்துள்ளார் எனத் தெரிகிறது. அப்படி நேற்று மாலை ஏரியிலிருந்து மணல் ஏற்றி வந்த லாரியை, அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெயக்குமார் என்பவர் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்டுள்ளார். அப்போது அண்ணாமலையின் ஆதரவாளர்கள் லாரியை ஏற்றி அவரை கொலை செய்ய முயன்றதாக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பிய ஜெயக்குமாருக்கு, கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அவர், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .
இந்த சம்பவம் தொடர்பாக, ஜெயக்குமார் உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் உளுந்தூர்பேட்டை காவல்நிலையம் முன்பு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததன் பேரில், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மணல் கடத்தலைத் தடுக்க சென்ற முன்னாள் அதிமுக கவுன்சிலர் மீது லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.