போதையில் அரசு பேருந்து ஓட்டுனர்களை தாக்கிய ஆட்டோ டிரைவரை கண்டித்து ஒருமணி நேரம் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர்.
காஞ்சிபுரம் பேருந்து நிலைய வாயிலில் இன்று காலை ஓரிக்கை பணிமனையில் இருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு தடம் எண் 155 என்ற அரசு பேருந்தை ஓட்டுனர் சுரேஷ்பாபு இயக்கி வந்துள்ளார்.
அப்போது பேருந்து நிலையம் அருகே பேருந்துக்கு எதிர் திசையில் வந்த ஆட்டோ ஓட்டுனர் தீபக் என்பவர் ஆட்டோவில் வந்த பயணிகளை இறக்கிவிட்டு ஆட்டோவை எடுப்பதற்கு காலதாமதம் செய்துள்ளார்.
இது குறித்து அரசு பேருந்து ஓட்டுனர் சுரேஷ் பாபு தீபக்கிடம் கேட்டதற்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் தீபக் ஆட்டோவை பேருந்துக்கு முன்னால் நிறுத்தி தகராறு செய்துள்ளார்
இதையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஆட்டோ ஓட்டுநர் தீபக் மற்றும் அவருடைய நண்பர்கள் இரண்டு பேர் சேர்ந்து அரசு பேருந்து ஓட்டுனர் சுரேஷ்பாபு மற்றொரு அரசு பேருந்து ஓட்டுநர் தனஞ்செயன், நடத்துனர் கணேஷ் ஆகியோiர் ராடால் தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.
இந்நிலையில், அரசு பேருந்து ஓட்டுநர்களை தாக்கியதை கண்டித்து அரசு பேருந்து ஓட்டுநர்கள் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் .பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் நேரில் வந்து சமரசம் செய்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதில் காயமடைந்த அரசு ஓட்டுநர் சுரேஷ்பாபு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். தனஞ்செயன், கணேஷ் ஆகிய இருவரும் முதல் உதவி சிகிச்சை பெற்று பணிக்கு திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு காரணமான புல்லட் தீபக்கை சிவகாஞ்சி காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய இரண்டு நபர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அரசு பேருந்து ஓட்டுனர்களை கஞ்சா போதை ஆசாமி தாக்கிய சம்பவத்தால் காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம், திருப்பதி, வேலூர், செங்கல்பட்டு, சென்னை, செய்யார் மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் சுமார் 1.30 மணி நேரமாக இயக்காததால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாயினர்.