ஆரணி அருகே கிருஷ்ணமூர்த்தி என்ற நெசவுத்தொழிலாளியிடம் வங்கி அதிகாரி போல் செல்போனில் பேசி நூதன முறையில் 65 ஆயிரம் ரூபாய் பணம் பறிக்கப்பட்டுள்ளது.
ஆரணி இந்தியன்வங்கி கிளையில் புதியதாக கணக்கு துவங்கி கடந்த 15 ஆம் தேதி ஏடிஎம் அட்டைக்கு விண்ணப்பித்தார் கிருஷ்ணமூர்த்தி. இந்நிலையில் கடந்த 18 ஆம்தேதி கிருஷ்ணமூர்த்தியை போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய ஒருவர், வங்கியில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். வங்கி ஏடிஎம் எண் குறித்த தகவல்களை கேட்டுள்ளார். வங்கியில் இருந்து பேசுவதாக நம்பிய கிருஷ்ணமூர்த்தியின் இரண்டு வங்கி கணக்குகளில் இருந்து 60 ஆயிரம் மற்றும் ஐந்தாயிரம் என பணம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனை அறியாமல் கடந்த 19 ஆம் தேதி ஏடிஎம் கார்டை பயன்படுத்தியபோது, பணம் இல்லாதது தெரியவந்தது. இந்த கணக்கில் இருந்து உத்திரபிரதேச மாநிலத்திற்கு ஆன்லைன் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக வங்கித்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பணத்தை மீட்டுத்தரக்கோரி ஆரணி நகர காவல்நிலையத்திற்கு சென்றபோது புகார் மனுவை பெற காவலர்கள் மறுத்துவிட்டதாக கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.