காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று முதல் அடுத்த 17 நாட்களுக்கு அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
காஞ்சிபுரத்தில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்தி மரத்தாலான பெருமாளை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்து வருகின்றனர். வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் குளத்திலிருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை, பக்தர்களின் தரிசனத்திற்காக கடந்த ஒன்றாம் தேதி முதல் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. சயன கோலத்தில் அத்திவரதர் 31 நாட்கள் காட்சியளித்து வந்தார்.
இந்நிலையில் இன்று முதல் அடுத்த 17 நாட்களுக்கு அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இன்று காலை 5 மணி முதல் பக்தர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் நின்ற கோலத்தில் இருந்த அத்திவரதரை தரிசனம் செய்தனர். அத்துடன் இன்று முதல் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நேற்று பொது தரிசனத்திற்கான நுழைவு வாயில் நண்பகல் 12 மணிக்கு மூடப்பட்டு, கோயில் வளாகத்தில் இருக்கக்கூடிய பக்தர்கள் மாலை 5 மணி வரை மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் விஐபி நபர்களுக்கான வரிசையில் வருபவர்கள் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை 5 மணி முதல் மீண்டும் பொது தரிசனம் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.