சென்னை ஐஐடியில் பட்டியலின மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தொல்லை படுத்தப்பட்டுள்ளனர் என்று தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை ஐஐடியில் கடந்த 8ஆம் தேதி கேரளாவை சேர்ந்த பாத்திமா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. மாணவியின் இறப்பிற்கு மூன்று பேராசிரியர்கள் காரணம் என்று அம்மாணவியின் செல்போனில் பதிவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்கலாமே: ஐஐடியில் தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை: மின்விசிறிகளில் புதிய தொழில்நுட்பம்!
இந்நிலையில், சென்னை ஐஐடியில் பட்டியலின மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தொல்லை படுத்தப்படுவதாக தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய பட்டியலினத்தவர் ஆணைய உறுப்பினர் சுவராஜ் வித்வான், “சென்னை ஐஐடியில் பட்டியலின மாணவர்கள் மிகவும் பயத்துடன் உள்ளனர். அவர்களின் குறைகளை முறையாக தெரிவிக்க பயந்து உள்ளனர். அதேபோல இந்த ஐஐடியில் பட்டியலின மாணவர்களுக்கு என்று சிறப்பு குழு அமைக்கப்படவில்லை.
மேலும், இந்தக் கல்லூரியில், கடந்த 10 ஆண்டுகளில் சேர்க்கப்பட்டுள்ள 3846 பி.எச்.டி மாணவர்களில் வெறும் 234 பேர் மட்டுமே பட்டியலினப் பிரிவை சேர்ந்தவர்களாக உள்ளனர். அதேபோல இந்த கால அளவில் எம்.எஸ் பட்டப் படிப்பிற்கு வெறும் 53 பட்டியலின பிரிவு மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஐஐடி சென்னை நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். மேலும் இந்த விவகாரம் பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கும் எடுத்துச் செல்லப்படும்” எனத் தெரிவித்துள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 14 மாணவர்கள் சென்னை ஐஐடி-யில் தற்கொலை செய்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: சென்னை ஐஐடியில் மாணவி தற்கொலை..!