சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக, நேரடியாக ஒளிபரப்ப தமிழ்நாடு அரசுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் என்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக இருந்தாலும், ஆளுநர் உரையின் முழு நிகழ்வும் நேரலை செய்யப்படவில்லை என கமல்ஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்புவது, பொது பிரச்னைகள் மீது மக்கள் பிரதிநிதிகள் நிகழ்த்தும் விவாதங்களை சாமானியனும் அறிந்துகொள்ள உதவும் என்று அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற நிகழ்வுகள் நேரடியாகவும், கேரள சட்டமன்ற நிகழ்வுகள் இணைய தளத்தில் நேரலை செய்யப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த வழியில், பட்ஜெட் கூட்டத்தொடரில் துறைவாரியான மானியக்கோரிக்கை விவாதங்கள் முழுவதையும் நேரலை செய்ய தமிழ்நாடு அரசு ஆவண செய்ய வேண்டும் என கமல்ஹாசன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.