தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனைப் பிடிக்க தனிப்படை அமைத்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கந்துவட்டி கொடுமையால் நடிகர் சசிகுமாரின் உறவினரும், இணை தயாரிப்பாளருமான அசோக்குமார் நேற்று தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் சடலத்தை கைப்பற்றிய பின்னர் நடத்தப்பட்ட சோதனையில், கந்துவட்டிக் கொடுமையால் அடைந்த பாதிப்பு குறித்து அவர் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பைனான்சியராக இருக்கும் அன்புச்செழியனிடம் கடன் வாங்கியது மிகப்பெரிய தவறு என குறிப்பிட்டுள்ளார். 7 ஆண்டுகளாக வட்டிக்கு மேல் வட்டி கட்டிய பிறகும், அன்புச்செழியன், தம்மையும் தமது குடும்பத்தினரையும் சமீபகாலமாக கீழ்த்தரமாக அவமானப்படுத்தியதாக கடிதத்தில் எழுதியிருந்தார். சசிக்குமாரையும் அவர் சித்ரவதை செய்வதாகவும் அசோக்குமார் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகவும் அசோக்குமார் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் திரைத்துறையினர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
இதனையடுத்து சசிக்குமாரும், அவரின் சக நண்பர்களான இயக்குநர்கள் பாலா, அமீர், கரு.பழனியப்பன், சமுத்திரக்கனி ஆகியோர் வளசரவாக்கம் காவல்நிலையத்தல் இதுதொடர்பாக புகார் அளித்தனர். அதன்பேரில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த சம்பவத்திற்கு பின் அன்புச்செழியன் தலைமறைவாகி விட்டார். எனவே அவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அன்புச்செழியனின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.