ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலைக்குறைவு காரணமாக 2016 டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வந்தனர். ஜெயலலிதா மரணம் குறித்து ஒரு நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரிக்கும் என்று 2017 ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
அதன்படி ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலாவின் உறவினர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சிவகுமார், அரசு அதிகாரிகள், அப்போலோ செவிலியர்கள், அப்போலோ மருத்துவர்கள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 145 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோர் வரும் 18ஆம் தேதி ஆஜராகும்படி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 20ஆம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் ஜெயலலிதாவின் பாதுகாவலராக இருந்த பெருமாள்சாமியும் அதே நாளில் விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதேபோல், அப்போலோ மருத்துவர் விஜயசந்திர ரெட்டி வரும் 17ஆம் தேதியும், எய்ம்ஸ் மருத்துவர்கள் நிக்கில் டண்டன், தேவ் கவுரவ் ஆகியோர் வரும் 19ஆம் தேதி ஆஜராகவும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.