ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற மருதுபாண்டியர் நினைவு தினத்தில் பங்கேற்ற அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது....
"தூத்துக்குடி சம்பவத்தை எடப்பாடி பழனிசாமி தொலைக்காட்சியில் பார்த்து, பொய்யான பேட்டி அளித்தது நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் மூலம் தெளிவாக தெரியவந்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவ அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட யாராக இருந்தாலும் பாராபட்சமின்றி தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆறுமுகசாமியின் அறிக்கை ஒரு அரசியல்வாதியின் அறிக்கை போல் உள்ளது. அப்போது துப்பாக்கிச் சூட்டிற்கு ஆதரவாக பேசியதால் ரஜினிகாந்த் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருக்கலாம். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின்படி இனி முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் கூட மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற தயங்குவார்கள்.
தமிழகத்தில் பெரும் மதிப்புக்குரிய மருத்துவர்கள் மற்றும் ராதாகிருஷ்ணன் போன்ற நேர்மையான அதிகாரிகள் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்" என டிடிவி தினகரன் தெரிவித்தார்.