அரும்பாக்கம் பெடரல் வங்கி தங்கநகை கொள்ளை: வெளியானது சிசிடிவி காட்சி! 15கிலோ தங்கம் மீட்பு?

அரும்பாக்கம் பெடரல் வங்கி தங்கநகை கொள்ளை: வெளியானது சிசிடிவி காட்சி! 15கிலோ தங்கம் மீட்பு?
அரும்பாக்கம் பெடரல் வங்கி தங்கநகை கொள்ளை: வெளியானது சிசிடிவி காட்சி! 15கிலோ தங்கம் மீட்பு?
Published on

சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கியில் 11 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கி கொள்ளை பற்றி துப்பு கொடுக்கும் மக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதனிடையே கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் சிசிடிவி பதிவுகள் வெளியாகி உள்ளன.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியில் தங்க நகைக் கடன் பிரிவில் லாக்கரில் இருந்த பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. வங்கியின் காவலாளிக்கு மயக்க மருந்து கொடுத்து, அதே வங்கியில் பணியாற்றும் முருகன் மற்றும் இருவர் துப்பாக்கிமுனையில் மேலாளர் உள்ளிட்டோரை கட்டிப்போட்டு லாக்கரில் இருந்த நகைகளை கொள்ளையடித்தாக தெரிகிறது.

வங்கி மேலாளர் அளித்த தகவலின்பேரில், வடக்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையர் அன்பு தலைமையிலான காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு தனிப்படை திருவண்ணாமலைக்கு விரைந்துள்ளது. இந்த சம்பவத்தில் முருகனின் தொடர்புடைய 15 நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முருகனின் உறவினரான பாலாஜி என்பவரை காவல்துறையினர் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நகைகளை கொள்ளையடித்தவர்களை வெகு விரைவில் பிடித்துவிட முடியும் என காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனிடையே, வங்கி கொள்ளை பற்றி துப்பு கொடுப்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 044-28 44 77 03, 044- 23 45 23 24 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் தகவல் அளிப்போரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே கொள்ளையர்களை பிடிக்கும் காவலர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நகைகளை கொள்ளையடித்தவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தில் பாதி அளவு தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நேற்று 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், இன்று 15 கிலோ தங்கம் வரை மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com