தனது மகன் விடுதலைப் பெற்று வீட்டுக்கு வந்தால்தான் முழு நிம்மதி அடைய முடியும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு 2-வது முறையாக பரோல் வழங்கப்பட்டதையடுத்து புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கிருந்து அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு முறைப்படி பரோலில் அழைத்து செல்லப்பட்டார்.
இது குறித்து பேசிய பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், “எனது மகன் இரண்டாவது முறை பரோலில் வந்தது மகிழ்ச்சி. இது போதாது. 28 ஆண்டுகாலம் அவனது வாழ்க்கை அழிந்து விட்டது. விரைவில் எனது மகன் விடுதலைப்பெற்று வீட்டுக்கு வந்தால்தான் முழு நிம்மதி அடைய முடியும். இதற்காக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். 2 முறை பரோல் கிடைக்க உறுதுணையாக இருந்த அரசுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். நிச்சயமாக விரைவில் எனது மகன் உட்பட இவ்வழக்கில் உள்ள அனைவருக்கும் அரசு விடுதலை வாங்கி தரும் என்ற நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருக்கிறேன்” என தெரிவித்தார்.
பேரறிவாளன் பரோல் குறித்து பேசிய அவரது வழக்கறிஞர், “தந்தையின் உடல் நிலையை கருத்தில் கொண்டே பேரறிவாளன் பரோலில் வந்துள்ளார். பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலையானலே அவரது தந்தை முழுவதுமாக குணமடைவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆகையால் பேரறிவாளனின் விடுதலை கோரிக்கையை தொடர்ந்து முன் வைப்போம். பேரறிவாளன் விரைவில் விடுதலை ஆவர் என்ற மிகப் பெரிய நம்பிக்கையில் உள்ளோம்” என தெரிவித்துள்ளார்