ஜம்மு-காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மணிவண்ணனின் உடல், அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள தேப்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். ராணுவ வீரரான அவர் காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் நேற்றுமுன் தினம் ஜம்மு-காஷ்மீரின் அனத்நாக் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மணிவண்ணன் உயிரிழந்தார். அவரது உடல் இன்று அதிகாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மணிவண்ணனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், 20 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகைக்கான காசோலையை வழங்கினார். தென்பிராந்திய ராணுவ தலைவர் ஆனந்த், மணிவண்ணனின் பெற்றோரிடம் 2லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார். அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் அஞ்சலிக்கு பிறகு மணிவண்ணனின் உடல் அவரது சொந்த ஊரான தேப்பனந்தலில் ராணுவ மரியாதையுடன், குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.