மகளைக் கொன்ற மருமகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் மற்றும் எஸ்பியிடம் முதியவர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரன். இவர் ராணுவத்தில் பணிபுரிகிறார். இவர் மனைவியின் பெயர் ரேணுகா. இவர்கள் குஜராத்தில் ராணுவ குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு யோகி ஸ்ரீ, தான்யா ஸ்ரீ என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
(ராணுவ வீரர் நாகேந்திரன்)
இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி ராணுவ அலுவலகத்திலிருந்து ரேணுகாவின் அப்பாவுக்கு போன் வந்தது. உங்கள் மகள் ரேணுகா சிலிண்டர் வெடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து குஜராத் சென்ற ரேணுகாவின் குடும்பம், அங்கு விசாரித்தது. அதில் ரேணுகா, தீ வைத்து தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்தது.
(கொலை செய்யப்பட்டுள்ள ரேனுகா)
பின்னர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ரேணுகாவின் உடலுடன், ஊருக்குத் திரும்பினர். அப்போது தனது தாய் ரேணுகாவை, தனது தந்தை தீ வைத்து கொளுத்தியதாக, உறவினர்களிடம் யோகி ஸ்ரீ தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த ரேணுகாவின் தந்தையும் உறவினர்களும் திருவண்ணாமலை திரும்பியதும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி ஆகியோரிடம் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளனர்.