செய்தியாளர் ஜெ அன்பரசன்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி இரவு, பெரம்பூரில் உள்ள புதிதாக கட்டப்பட்டு வரும் அவரது வீட்டின் முன் மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரையில், ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, திருனின்றவூர் பா.ஜ.க நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், திமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அருள், கோகுல், விஜய், சிவசக்தி, தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞரணி துணைத் தலைவர் ஹரிஹரன், அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு கழக பகுதி துணைச் செயலாளர் மலர்கொடி, தி.மு.க திருவள்ளூர் மத்திய மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசன் மகன் சதீஷ் ஆகிய 14 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருவேங்கடம் என்ற ரவுடி போலீசாரை தாக்க முயன்ற சம்பவத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இந்நிலையில், வட சென்னை பாஜக மகளிரணி துணை செயலாளரான அஞ்சலை தலைமறைவாக இருப்பதாகவும் அவரைத் தேடி வருவதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக, திமுக, பாஜக என மூன்று முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, 2001ஆம் ஆண்டு தோட்டம் சேகர் என்பவர் ரவுடி சிவக்குமாரால் கொலை செய்யப்பட்டார். தோட்டம் சேகரின் மகன்கள் 20 ஆண்டுகள் கழித்து, கடந்த 2021ஆம் ஆண்டு ரவுடி சிவக்குமாரை மாம்பலத்தில் வைத்து கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு பட்டினப்பாக்கத்தில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அதற்குப் பழி வாங்குவதற்காக மட்டுமே ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள திமுக வழக்கறிஞர் அருள் என்பவர் படுகொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மைத்துனர். இவர் ஆற்காடு சுரேஷின் கொலைவழக்கில் பழிக்கு பழி வாங்க, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டுமிட்டு கொலை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனியாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய இயலாது என்பதால் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ஆற்காடு சுரேஷின் காதலியான பா.ஜ.க நிர்வாகி அஞ்சலை ஆகிய நபர்களோடு கூட்டு சேர்ந்து கொலை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்காக திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த பிரபல தாதாவின் மனைவியும் அதிமுக நிர்வாகியுமான வழக்கறிஞர் மலர்கொடியிடம் திமுக வழக்கறிஞர் அருள் நாட்டு வெடிகுண்டுகள் வாங்கியுள்ளார் என்பதும் போலீசார் விசராணையில் தெரியவந்துள்ளது. இதற்கு பல கட்டங்களில் ரூபாய் 10 லட்சத்திற்கு மேல் வங்கியில் பணம் அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மலர்கொடியின் மகன் வழக்கறிஞர் அழகு ராஜா என்பவர் தற்போது கொலை வழக்கு ஒன்றில் சிறையில் இருப்பதால் அவரின் ஜீப்பை இந்த அருளுக்கு கொடுத்து உதவியதும் தெரியவந்துள்ளது.
திமுக வழக்கறிஞரான அருளுக்கு திமுக நிர்வாகியின் மகனான சதீஷ் என்பவர் தனது பொலிரோ காரை கொடுத்ததும், சென்னையில் கொலையாளிகள் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்து கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தமிழ்மாநில காங்கிரஸ் நிர்வாகி ஹரிஹரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான மற்றுமொரு தகவல் வெளியானது. தென்சென்னையின் மோஸ்ட் வாண்டட் A+ ரவுடியான சம்பவ செந்தில் (எ) சம்போ செந்திலும் இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. குறிப்பாக திமுக வழக்கறிஞரான அருளுக்கு சம்போ செந்திலை அறிமுகப்படுத்தியது ஹரிஹரன்தான் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், ரவுடி சம்போ செந்தில் ரூ.4 லட்சம் ஹரிஹரனிடம் கொடுத்ததும் அந்தப் பணத்தை ஹரிஹரன் அருளுக்கு கொடுத்து பின் அதனை மலர்கொடிக்கு அருள் கொடுத்ததும் தெரியவந்துள்ளது. ரவுடி சம்போ செந்திலுக்கும், ஆம்ஸ்ட்ராங்குக்கும் இடையே தென்சென்னை கட்டப்பஞ்சாயத்து விவகாரங்களில் பலமுறை மோதல் ஏற்பட்டதும் அதனால் இருவருக்குள்ளும் பகை ஏற்பட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்போ செந்திலின் பங்கு என்ன? என்பது குறித்து விசாரிக்க சம்போ செந்திலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் சதீஷின் பொலிரோ, மலர்கொடியின் மகன் அழகுராஜாவின் ஜீப், ஹரிஹரனின் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போலீசாரின் தொடர் விசாரணையில், திருவள்ளூர் அருகே ஒரு கட்டுமான நிறுவன கட்டப்பஞ்சாயத்து நடந்தபோது ஆற்காடு சுரேஷுக்கும், ஆம்ஸ்ட்ராங்கும் பகை முற்றியதாகவும் தெரியவந்துள்ளது.
ஆற்காடு சுரேஷ் படுகொலைக்கு பின் அவரது தம்பி பொன்னை பாலு திருவண்ணாமலை அருகே பல கோடி ரூபாய் மதிப்பிலான இடத்திற்கான கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தில் அவருக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், வட சென்னையைச் சேர்ந்த தற்போது சிறையில் இருக்கும் பிரபல ரவுடி ஒருவருக்கும் ஆம்ஸ்ட்ராங்கும் இடையே சோழவரம் அருகே பலகோடி ரூபாய் மதிப்புகொண்ட கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தில் நேரடி மோதல் ஏற்பட்டதும், அதே விவகாரத்தில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த நபர்களையும் மிரட்டி ஆம்ஸ்ட்ராங் தரப்பு கட்டப்பஞ்சாயத்து செய்ததும் தெரியவந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னையை சேர்ந்த பெரிய ரவுடிகளின் பின்னணி இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்போ செந்தில் உள்ளிட்ட சென்னையின் மூன்று முக்கிய ரவுடிகளின் கடந்த கால செல்போன் உரையாடல்கள் பின்னணி குறித்த விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலைப் பின்ணணியை விசாரித்த பட்டினப்பாக்கம் போலீசார், அந்த விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங் தொடர்பு இருப்பதாக எந்தவித விசாரணை அறிக்கையையும் வழங்கவில்லை. எனினும் ஆம்ஸ்ட்ராங் வழக்கின் கொலையாளிகள் வாக்குமூலம் கொடுத்ததைத் தொடர்ந்து, உண்மையை அறிய, ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கை மீண்டும் விசாரித்து முறையாக அறிக்கை தர வேண்டும் என விசாரணை முடக்கிவிடப்பட்டுள்ளது.
ஆற்காடு சுரேஷ் வழக்கில் ஆம்ஸ்ட்ராங்கின் தொடர்பு உள்ளதா? என விசாரிக்க அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் கால் ரெக்கார்டு உள்ளிட்ட அறிவியல் ரீதியான தடயங்களை மீண்டும் ஆய்வு செய்யும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர்.
ஏற்கனவே வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி மற்றும் அப்போது பணியில் ஆய்வாளர் உதவி ஆய்வாளர்களை மற்றும் காவலர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பின்னர் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடமும் விசாரணை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி சீசிங் ராஜாவிற்கு தொடர்பா? என்ற கோணத்தில் அவரது ஆதரவாளர்களிடம் சீசிங் ராஜா பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். வில்லிவாக்கம் போன்ற பகுதியில் அவருடன் தொடர்பில் உள்ளவர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
சீசிங் ராஜா ஆற்காடு சுரேஷின் கூட்டாளி ஆவார். சின்னா கொலை வழக்கு மற்றும் தென்னரசு கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷுடன் சேர்ந்து செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.