ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில், சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் தலைமறைவாக இருந்து வரும் நிலையில், அவரது செல்போன் எண் தொடர்புகளை வைத்து யார் யாரிடம் பேசி உள்ளார் என விசாரணை நடைபெறுகிறது.
இதன்மூலம், மொட்டை கிருஷ்ணனுடன் பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவியும் வழக்கறிஞருமான மோனிஷா பேசியதால், அவரிடமும் காவல்துறை விசாரணை நடத்தினர். அதில், மொட்டை கிருஷ்ணன் தனது நண்பர் எனவும், வழக்கு ஒன்றுக்காக பேசியதாகவும் வாக்குமூலம் கொடுத்திருந்தார். இதனிடையே, வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸை சென்னை காவல்துறை பிறப்பித்துள்ளது. வெளிநாடுகளில் பதுங்கி இருந்தால் காவல் துறையினரிடம் சிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மொட்டை கிருஷ்ணன் குடும்பத்துடன் தாய்லாந்து தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் காவல்துறைக்கு தேவையான ஒத்துழைப்பை அளித்து வருகிறோம் என இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில், “வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் தொடர்பாக கடந்த 7ஆம் தேதி காவல்துறை கோரிய விளக்கத்தை அளித்துள்ளோம். மொட்டை கிருஷ்ணனுக்கு எந்த பண உதவியும் வழங்கவில்லை.. ஆதாரமற்ற தகவல் வெளியாகியுள்ளது. தவறான தகவல்களை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். காவல்துறைக்கு தேவையான ஒத்துழைப்பை அளித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.