செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அருள், திருவேங்கடம், திருமலை, திருனின்றவூர் பா.ஜ.க நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், விஜய், சிவசக்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி துணைத் தலைவர் ஹரிஹரன், அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு கழக பகுதி துணைச் செயலாளர் மலர்கொடி, தி.மு.க திருவள்ளுார் மத்திய மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசன் மகன் சதீஷ், ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து வட சென்னை பா.ஜ.க மகளிரணி துணை செயலாளர் அஞ்சலை. கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், வழக்கறிஞர் சிவா, பிரதீப், முகிலன், அப்பு, நூர் விஜய் (எ) விஜயகுமார் என மொத்தம் 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களை போலீசார் கைது செய்து வரும் நிலையில், மிகப்பெரிய ரவுடிகளான சம்போ செந்தில் மற்றும் சீசிங் ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், போலீசார் கைது செய்யப்பட்ட நபர்களை ஒவ்வொருவராக கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதிக அளவிலான பணப்பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களது சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கு பணபரிவர்த்தனைகள், சொத்து பட்டியல், கொலையில் கிடைத்த பணத்தை எதில் பயன்படுத்தியுள்ளனர்? என்ற முழு விவரங்களையும் போலீசார் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக எவ்வளவு பணம் கைமாறி இருக்கிறது என்பதை போலீசார் பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரவுடிகளின் சொத்துக்கள் மற்றும் அவர்களது பணத்தை முடக்கினால் ரவுடியிசத்தை கட்டுப்படுத்தப்படும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.