அரியலூரில் சிமெண்ட் ஆலை லாரிகளால் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் புழுதி மற்றும் சகதியைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் அரசு உள்ளிட்ட தனியார் சிமெண்ட் ஆலைகள் ஏழு உள்ளன. இவற்றிற்கு சொந்தமாக சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் தேசிய நெடுஞ்சாலை ஓரங்கள் மற்றும் கிராம பகுதிகளில் அமைந்துள்ளது. திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் ஆலைகளுக்கு சுண்ணாம்புக் கற்களை ஏற்றிக்கொண்டு நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் செல்கின்றன. இந்த லாரிகளால் வெயில் காலங்களில் புழுதி ஏற்பட்டு எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை உள்ளது.
அதேநேரம் மழை நேரத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களுக்கு சென்று வரும் லாரிகளின் சக்கரங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் சுண்ணாம்பு, சாலைகளில் படிந்து சேறும் சகதியுமாக மாறி வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.