அரியலூர் - வஞ்சத்தான் ஓடையில் மீனுக்கு விரித்த வலையில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிப்பட்டது.
அரியலூர் அருகேயுள்ள பாலாம்பாடி கிராமத்தில் வஞ்சத்தான் ஓடை உள்ளது. இந்த ஓடையில் மீன் பிடிப்பதற்காக விரித்த வலையில் மலைப்பாம்பு ஒன்று சிக்கியுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்பவர் தீயணைப்புத் துறைக்கு இன்று தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான வீரர்கள் அப்பகுதிக்குச் சென்று ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் மலைப்பாம்பை அரியலூர் தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டு வந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு வந்த வனவர் சக்திவேலிடம் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒப்படைக்கபட்டது. பின்னர் பேரளி அல்லது பச்சைமலை காட்டில் விடப்படவுள்ளதாக வனவர் தெரிவித்தார்.