செய்தியாளர்: இஸ்மாயில்
உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் இரண்டாம் நாள் மாலை உற்சவத்தையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தீபதாரனைகள் நடைபெற்றுது. இதையடுத்து திருக்கோயிலில் இருந்து புறப்பட்டு டி.கே.நம்பி தெரு, ரங்கசாமி குளம்,கீரை மண்டபம், மூங்கில் மண்டபம், பேருந்து நிலையம் வழியாக மேற்கு ராஜவீதி வழியாக வந்து சங்கரமடம் எதிரே மண்டப்கபடி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து அங்கு தென்கலை பிரிவினர், பிரபந்தம் பாட முற்பட்டனர். அப்போது வடகலை பிரிவினருக்கும் தென்கலை பிரிவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து போலீசார், இரு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருதரப்பினரும் பிரபந்தம் பாட அனுமதி இல்லையென நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ள நிலையில், பிரபந்தம் பாடிக் கொண்டிருந்த எதிர் தரப்பினர் கூச்சல் எழுப்பியதால் அங்கு சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
ஒரு வழியாக வாக்குவாதத்துடனே பிரச்னை முடிவுக்கு வந்த நிலையில், மண்டபடி கண்டருளிய வரதராஜ பெருமானுக்கு தூப, தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு ராஜவீதிகள் வலம் வந்து மீண்டும் திருக்கோயிலை சென்றடைந்தார். பிரபந்தம் பாடுவதில் இருதரப்பினரிடையே பிரச்னை இருந்துவரும் நிலையில், இந்த சர்ச்சை அங்கிருந்த பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது.