'நீங்கள் இந்தியரா?' - ஆர்டிஐ மூலம் விளக்கம் கேட்டவருக்கு கல்லூரி முதல்வரின் சர்ச்சை கடிதம்

'நீங்கள் இந்தியரா?' - ஆர்டிஐ மூலம் விளக்கம் கேட்டவருக்கு கல்லூரி முதல்வரின் சர்ச்சை கடிதம்
'நீங்கள் இந்தியரா?' - ஆர்டிஐ மூலம் விளக்கம் கேட்டவருக்கு கல்லூரி முதல்வரின் சர்ச்சை கடிதம்
Published on

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் கேட்ட சமூக ஆர்வலரை, நீங்கள் இந்தியர் என்பதை நிரூபிக்க ஆவணம் வழங்குமாறு கல்லூரி நிர்வாகம் சர்ச்சைக்குரிய கடிதத்தை அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. பாரதிதாசன் உறுப்பு கல்லூரியாக செயல்பட்டு வரும் இக்கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், கல்லூரி பின்புற மைதானத்தில் உள்ள சுற்றுச்சுவரை சில மர்ம நபர்கள் இடித்துவிட்டு மது குடிப்பது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனால் அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ள பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் கல்லூரிக்கு பின்பறம் உள்ள எலிசா நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுரேஷ்குமார் என்பவர் இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடமும், பலமுறை புகார் அளித்துள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் 26.93 லட்சத்தில் கல்லூரி சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது, அது தற்போது இடிக்கப்பட்டு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக புகார் அளித்திருத்தேன், இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, காவல் நிலையத்தில் எதுவும் புகார் அளிக்கப்பட்டுள்ளதா என கேட்டுள்ளார்.

இதற்கு கல்லூரி முதல்வர் செந்தமிழ் செல்வி, தகவல் அறியும் சட்டம் 2005-ன் படி இந்தியர்களுக்கு மட்டுமே தகவல் அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் இந்தியர் என்பதற்கான ஆதாரத்தை அனுப்பி வைக்குமாறு பதில் அளித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சுரேஷ்குமார் கூறுகையில், எங்கள் குடியிருப்புக்கு அருகில் கல்லூரி மைதானம் அமைந்துள்ளது. மேலும் விடுதிகளும் செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்கு சுற்றுச்சுவரை இடித்து சமூக விரோதிகள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளிக்கப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறியும் சட்டத்தில் கேட்டத்தற்கு தன்னை இந்தியர் என்று நிரூபிக்க ஆவணம் கேட்டுள்ளார் கல்லூரி முதல்வர் செந்தமிழ் செல்வி, இது கண்டனத்திற்குரியது. தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல் கேட்பதற்கு அடிப்படை தகவல்கள் அதாவது பெயர், தொலைபேசி எண் இருந்தாலே போதும், ஒரு வேளை அவ்வாறு சந்தேகம் இருப்பினும், எதன் அடிப்படையில் சந்தேகம் உள்ளது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும், ஆனால் அவர் எதுவும் இல்லாமல் பொதுவாக என்னிடம் இந்தியர் என்பதற்கான ஆதாரத்தை கேட்பது கண்டனத்திற்குரியது`` என்றார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com