தனியார் மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சை கட்டணம்: உயர் நீதிமன்றம் கேள்வி

தனியார் மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சை கட்டணம்: உயர் நீதிமன்றம் கேள்வி
தனியார் மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சை கட்டணம்: உயர் நீதிமன்றம் கேள்வி
Published on

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக அரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறதா? என சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது.

மதுரையை சேர்ந்த ரமேஷ்  உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," நாள்தோறும் லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் .  ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். பலர் போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காமல் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. பொதுவாக அரசு மருத்துவமனைகளில் சுகாதாரமின்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகள் இதனை காரணம் காட்டி மிக அதிக அளவில் பணம் வசூல் செய்கின்றனர். தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூல் செய்வதையும் சிகிச்சை அளிப்பதையும் சிறப்பு குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும். இதற்காக பறக்கும் படை போன்ற படைகள் அமைத்து இவற்றை நெறிப்படுத்த வேண்டும் .கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் மருத்துவமனைகளை, செயல்படவிடாமல் தடை செய்ய வேண்டும் . மேலும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை அளிக்க கடுமையான நெறிமுறைகளை பின்பற்றுவதை கண்காணிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், " தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க சுகாதார துறை தரப்பில் சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், "தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் கொரோனா சிகிச்சைக்காக வசூலிக்கப்படுகிறதா? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com