சிவகங்கையைச் சேர்ந்த அர்ச்சனா என்பவர் குரூப்-1 தேர்வில் முதல் முயற்சியிலேயே முதலிடம் பெற்றிருக்கிறார்.
டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட 181 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகளில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட 362 பேரின் பட்டியலில் 257 பேர் பெண்கள். இந்தச் சாதனைப் பட்டியலில் முத்தாய்ப்பாக முதலிடம் பெற்றவர் அர்ச்சனா. போட்டித் தேர்வுகளில் பொறியியல் பட்டதாரிகளின் ஆதிக்கம் அதிகமாகிறது என்றாலும், வேலைவாய்ப்பின்மை அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.
ஆனால் அர்ச்சனாவோ கல்லூரி வளாக நேர்காணலிலேயே, தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணி பெற்றவர். 7 ஆண்டுகளாக பணியாற்றிய இவர் அரசுப் பணியின் மீது கொண்ட ஆர்வத்தால் தனது பணியை ராஜினாமா செய்தார். அப்போது அவரின் ஊதியம் 1 லட்சத்தைத் தாண்டி இருந்தது. ஆனால் அவரது இந்த முடிவு வீண் போகவில்லை. அர்ச்சனாவின் தன்னம்பிக்கை அவரின் முதல் முயற்சியிலேயே கைகொடுத்துள்ளது. இதற்கு குடும்பத்தாரின் ஒத்துழைப்பும், முறையான பயிற்சியும் உதவிகரமாக அமைந்திருக்கிறது.
வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கையுடன் தேர்வு முறை குறித்த ஆழமான புரிதலுடன் திட்டமிட்டு தயாரானால், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவது எளிமையே என்கிறார் அர்ச்சனா. மேலும் இந்தத் தேர்வுக்காக தினமும் 10 மணிநேரம் படித்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.