புதுக்கோட்டை மாவட்டம் பெருங்காட்டில் பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து மாணவன் உயிரிழந்துள்ளார். வகுப்பறையில் இருந்து சக மாணவர்களுடன் நடந்து வந்த மாணவர் மாரிமுத்து திடீரென சுருண்டு விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவர் மாரிமுத்து உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அறந்தாங்கி அருகே உள்ள மேலமங்களம் தெற்கு கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் மாரிமுத்து. இவர் அருகே உள்ள பெருங்காடு அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல் இன்று பள்ளிக்கு சென்ற மாணவர் மாரிமுத்து, அங்கு நடந்த குழந்தைகள் தின விழாவிலும் கலந்துகொண்டுள்ளார். மாலை 3 மணியளவில் வீட்டிற்கு செல்வதற்காக வகுப்பில் இருந்து புத்தகப்பையை எடுத்துக் கொண்டு வரும்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
உடன்வந்த சக மாணவர் எழுப்பியும் எழுந்துகொள்ளாத நிலையில் உடன் வந்த மாணவர் ஆசிரியருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் மாணவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனை அடுத்து மாணவரின் உறவினர்கள், உடன்படித்த சக மாணவர்கள் மருத்துவமனை முன் கூடினர். இந்த சூழலில் மாணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவரின் பெற்றொர் காவல்துறையிடம் தெரிவித்தனர். இதனை அடுத்து பெற்றோரை பள்ளிக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் பள்ளியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போட்டுக் காண்பித்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகளை பார்த்த பெற்றோர் மாணவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய சம்மதம் தெரிவித்துள்ளனர். தற்போது அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் மாணவரின் உடல் உள்ளது. உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.