ஆரணி சுற்று வட்டாரப் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கோவில்களில் கடந்த இரண்டு மாதத்தில் உண்டியலை உடைத்து திருடும் மர்ம கும்பலை பிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக நள்ளிரவு நேரங்களில் கோவில்களில் உள்ள உண்டியல்களை உடைத்து மர்ம கும்பல் ஒன்று பணத்தை திருடி வருகிறது.
ஆரணி அருகே லட்சுமி நகர் முத்துமாரியம்மன் கோவில், வி.ஏ.க நகர் விநாயகர் கோவில், ஆரணி பாளையம் விநாயகர் கோவில், என
10க்கும் மேற்பட்ட கோவில்களில் நள்ளிரவில் உண்டியல்களை உடைத்து தொடர்ச்சியாக மர்ம நபர்கள் பணம் திருடி வருகின்றனர்.
இந்த சம்பவம் கோவில்களில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி வருகின்றது. அந்த சிசிடிவி பதிவை வைத்து காவல் துறையினர் குற்றவாளிகளை தொடர்ச்சியாக தேடி வந்த நிலையில் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாததால் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு காவல் துறையினர் கண்ணில் மிளகாய் பொடி தூவியதுபோல் ஆரணி டவுன் மையப்பகுதியில் உள்ள மாரியம்மன் ஆலயத்தின் வெளியில் உள்ள உண்டியலை இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் இரும்பு ராடால் உடைத்து அதிலிருந்த சுமார் 10,000 ரூபாய் பணத்தை லாவகமாக திருடி சென்றிருக்கிறார்கள். இந்த காட்சி மாரியம்மன் கோவிலில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது.
இந்த சிசிடிவி பதிவை பார்த்து கோயிலின் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஆரணி டவுன் மையப்பகுதியில் உள்ள மாரியம்மன் ஆலயத்தில் உண்டியலை உடைத்து திருடிய சம்பவம் பக்தர்கள் மற்றும் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்தும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் ஆரணி காவல் துறையினர் திணறி வருகின்றனர்.